பணம் தர மறுத்த மகன்.. குடி போதையில் துப்பாக்கியால் சுட்ட தந்தை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடகாவில் குடிக்க பணம் தர மறுத்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடகு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நர்தன் போபண்ணா (25). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது தந்தை மற்றும் தாயாருடன் ஒரே வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நர்த்தனின் தந்தை சுரேஷ், படுத்த படுக்கையான மனைவியை கவனிக்கவில்லை. இதனிடையே குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தனிடம் சுரேஷ் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மது குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தன் போபண்ணாவிடம் சுரேஷ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நர்த்தன் போபண்ணா அவரை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார். ஆனால் அறைக்குள் இருந்து சுரேஷ் குடிக்க பணம் கேட்டுள்ளார். பூட்டிய அறைக்கு வெளியே நர்த்தன் போபண்ணா அமர்ந்திருந்தார்.
அப்போது திடீரென கதவின் பூட்டை உடைக்க கதவின் பின்புறத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டார். நர்தனின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் தங்கையை அழைத்தார் நர்தன் போபண்ணா. தந்தை துப்பாக்கியால் சுட்டதாக கூறினார். அவரது சகோதரி சம்பவ இடத்திற்கு வந்தபோது நர்த்தன் போபண்ணா சுயநினைவின்றி இருந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நர்த்தன் போபண்ணா உயிரிழந்தார். இந்த கொலை குறித்து காமக்ஷிபால்யா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து நர்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதையில் இருந்த சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.