குடிபோதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்.. 6 மாணவர்கள் பரிதாப பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்
அரியானாவில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பள்ளி பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் நர்னால் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றின் பேருந்து இன்று காலை மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது. அந்த பேருந்து, உன்ஹானி கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்தனர். பல மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பல விசயங்கள் தெரிய வந்தன. பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். சம்பவத்தின்போது மதுபானம் குடித்திருந்த அவர், நன்றாக போதையில் இருந்தபடியே பேருந்து ஓட்டினார் என சம்பவம் நடந்தபோது, அதனை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
பேருந்து சரியாக இருக்கிறது என்பதற்கான சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன் 2018-ம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டது என போலீசார் தெரிவித்தனர். அரியானா போக்குவரத்து அமைச்சர் அசீம் கோயல் கூறும்போது, அந்த பேருந்துக்கு வேண்டிய சில குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாததற்காக சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்பின்னரும் அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது பள்ளி நிர்வாகத்தின் தவறு ஆகும். ஆவணங்கள் இல்லாததற்காக ரூ.15,500 அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என அவர் கூறினார்.
ரமலானை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி திறந்திருப்பதற்கான காரணம் பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்காக விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சர் சீமா திரிகா கூறியுள்ளார்.