டேங்கர் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 18 பேர் பரிதாப பலி.. உத்தர பிரதேசத்தில் சோகம்!

உத்தர பிரதேசத்தில் பால் லாரி மீது, டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ - ஆக்ரா விரைவுச் சாலையில் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று, பால் லாரி மீது மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பாங்கர்மாவ் வட்ட அதிகாரி அரவிந்த் சவுராசியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்குள்ளான டபுள் டெக்கர் பேருந்தில் பயணித்த 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Visuals from the Lucknow-Agra Expressway in Unnao reveal the aftermath of a fatal accident where a bus collided with a milk tanker, resulting in 18 deaths and injuries to 19 others.#AgraLucknowExpressway #UnnaoAccident #uttarprdesh pic.twitter.com/u5NDqKMMYa
— Headpen (@officialheadpen) July 10, 2024
இச்சம்பவம் குறித்து பேசிய உத்தரபிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், “இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர், 19 பேர் காயமடைந்து உன்னாவ் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உயர்மட்ட மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உன்னாவ் அருகே உள்ள அனைத்து மருத்துவமனைகளும் சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. நான் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து வருகிறேன், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று கூறினார்.