மக்களிடம் ஓட்டு கேட்காதீர்கள்...  காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தியின் கட்டளை!!

 
Rahul

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்டார அளவிலான கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளிடம் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.

”குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வரும்போதெல்லாம் குஜராத் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கிறோம். நாம் நமது கடமைகளை நிறைவேற்றும்வரை, குஜராத் மக்கள் நம்மை தேர்தலில் வெற்றிபெற வைக்கமாட்டார்கள். நாமும் ஓட்டுப்போடுங்கள் என மக்களிடம் கேட்க கூடாது. நாம் நமது கடைமைகளை நிறைவேற்றும்போது, குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள்..

இந்தியாவின் சுதந்திர போராட்ட இயக்கத்தை வழிநடத்தியதில் குஜராத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆங்கிலேயர்களை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டபோது, இந்திய மக்களின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சிதான் இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மகாத்மா காந்தி வந்தாலும். அவரை நமக்கு கொடுத்தது குஜராத் மாநிலம்தான், காங்கிரஸ் கட்சிக்கு  அந்த உன்னதமான  தலைவரைக் கொடுத்தது. இந்தியாவுக்கு வழிகாட்டிய மாநிலமே குஜராத்தான். காந்திஜியிடம் 5 மிகப் பெரிய தலைவர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் குஜராத் தற்போது சிக்கிக் கொண்டுள்ளது. குஜராத் முன்னேற விரும்புகிறது. நம்மால் குஜராத்துக்கு வழிகாட்ட முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக குஜராத்தின் எதிர்பார்ப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை.குஜராத்தின் முதுகெலும்பே சிறு வணிகர்கள்தான். அவர்களின் வாழ்க்கைப் போராட்டமாக உள்ளது. புதிய தொலைநோக்குக்காக விவசாயிகள் குரல் எழுப்புகின்றனர். காங்கிரஸ் கட்சியால் அந்த தொலைநோக்கை தரமுடியும்.

முதலில் நாம் நமது கட்சியை வலுப்படுத்த வேண்டும். குஜராத்தில் எதிர்க்கட்சிக்கு 40 சதவீத ஓட்டுகள் உள்ளன. வெற்றிக்கு 5 சதவீத ஓட்டுக்கள்தான் தேவை. தெலங்கானாவில் ஓட்டு சதவீதத்தை நாம் 22 சதவீதம் அதிகரித்துள்ளோம். அதேபோல் குஜராத்திலும் நம்மால் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க முடியும். ஆனால், கட்சியில் சிலரை வடிகட்ட வேண்டியதுள்ளது. மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி எனது உறுதிப்பாட்டை தெரியப்படுத்துங்கள். நம்பிக்கை உங்களுக்குள் உள்ளது. அதை வெளிக்கொண்டுவருவதுதான் எனது வேலை” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஓட்டு கேட்காதீர்கள், மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். கட்சியை வலுப்படுத்துங்கள். மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்று ராகுல் பேசியது குஜராத் கட்சியினர் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. வடிகட்டும் படலம் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.