செவிலியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர், சக ஊழியர்கள்.. உடலை ஆம்புலன்சில் வீசிய  கொடூரம்!

 
Gang-rape Gang-rape

பீகாரில் செவிலியரை டாக்டர் மற்றும் சக ஊழியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரன் மாவட்டம் மொதிஹரி நகரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 30 வயது பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வந்தார். கணவரை இழந்த இவருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், செவிலியரை அதே மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டர் மற்றும் சக ஊழியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.

கடந்த 8-ம் தேதி வேலைக்கு சென்ற செவிலியரை டாக்டர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட செவிலியரின் தாயார் போலீசில் புகார் அளித்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர் மற்றும் சக ஊழியர்கள் தலைமறைவாகினர்.

rape

இதனை தொடர்ந்து தலைமறைவான டாக்டர் ஜெய்பிரகாஷ் உள்பட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய 5 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட செவிலியரின் தாயார் போலீசில் அளித்த புகாரில், 30 வயதான என் மகளுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. கணவர் உயிரிழந்ததையடுத்து என் மகள் என்னுடன் வாழ்ந்து வந்தார். அவரின் நிலைமையை பார்த்து டாக்டர் ஜெய்பிரகாஷ் மற்றும் மந்தொஷ் குமார் இருவரும் என் மகளை அவர்களின் மருத்துவமனையில் செவிலியராக வேலைக்கு வருமாறு அழைத்தனர்.

என் மகளும் வேலை தேடிக்கொண்டிருந்ததால் அவரும் மருத்துவமனைக்கு செவிலியர் வேலைக்கு சென்றார். ஆனால், வேலைக்கு சென்ற ஓரிரு நாட்கள் கழித்து அவர் மீண்டும் வேலைக்கு செல்ல மறுத்துவிட்டார். வேலைக்கு செல்ல மறுப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது டாக்டர் மற்றும் சக ஊழியர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் கூறினார்.

Dead Body

ஆனால், சில நாட்கள் கழித்து டாக்டர் பிரகாஷூம், மந்தொஷ் குமாரும் என் வீட்டிற்கு வந்து மன்னிப்புக்கேட்டனர். மேலும், என் மகளை மீண்டும் வேலைக்கு வரும்படியும், கூடுதல் சம்பளம் தருவதாகவும் கூறினர். இதனை தொடர்ந்து என் மகள் மீண்டும் வேலைக்கு சென்றார். கடந்த 8-ம் தேதி வேலைக்கு சென்ற என் மகள் வீடு திரும்பவில்லை. பின்னர், என் மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் முசாபர்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஜெயபிரகாஷ் என்னிடம் கூறினார்.

நாங்கள் முசாபர்பூரில் ஜெயபிரகாஷ் கூறிய மருத்துமனைக்கு சென்று பார்த்தோம். அங்கு என் மகள் இல்லை. பின்னர் நீண்ட தேடுதலுக்கு பின் என் மகள் ஆம்புலன்சில் பிணமாக கிடந்ததை பார்த்தோம் என கொல்லப்பட்ட செவிலியரின் தாயார் தன் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web