உங்களிடம் பல சிம் கார்டுகள் இருக்கா.. சிறைக்கு செல்ல நேரிடும் என்பது தெரியுமா?

 
Sim card Sim card

ஒருவர் பெயரில் 9-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு தொலைபேசி சாதனம் முக்கிய காரணங்களாக விளங்குகிறது. இதனால் தொலைபேசி பயன்பாட்டில் புதிய நெறிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ், நாடு முழுவதும் ஒருவர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே பயன்படுத்தலாம் என்றும், சில முக்கிய பகுதிகளில் இந்த அளவு இன்னும் குறைக்கப்பட்டுள்ளது என்றும், விதியை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்போன் எண்கள் மூலமாக பல மோசடிகளை செய்துவிட்டு, மோசடிக்குப் பயன்படுத்தும் சிம் கார்டுகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சிம் கார்டுகள் மூலம் மோசடியை அரங்கேற்றும் மோசடிக் கும்பலை முடக்கவே, நாடு முழுவதும் ஒருவர் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தையும் பொருத்து, ஒருவர் பயன்படுத்தும் அதிகபட்ச சிம் கார்டுகளுக்கான வரைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

phone

தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால், நாடு முழுவதும் ஒருவர் அதிகபட்சமாக தனது பெயரில் 9 சிம் கார்டுகள் வைத்திருக்கலாம். சற்று பதற்றமான ஜம்மு - காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்கலாம்.  முதல் முறையாக இவ்வாறு 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதுவே தொடர்ந்தால் ரூ.2 லட்சம் அளவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

இந்த சட்டம், அதிகபட்சமாக சிம் கார்டுகளை பயன்படுத்தினால் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யவில்லை என்றாலும், சிம் கார்டுகள் மூலம் தவறான செயல்களில் ஈடுபட்டால் அதற்கு சிறைத் தண்டனை விதிக்க வழிவகை இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒருவர்  சிம் கார்டை தவறான பயன்பாட்டுக்காக வாங்கி, மோசடியில் ஈடுபட்டால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், சில வேளைகளில் இரண்டுமே விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Union Govt

ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றன என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் உள்ளது. ஒருவேளை, மோசடியாளர்கள் உங்கள் பெயரில் சிம் கார்டு பெற்றிருந்தால், அதனை அறிந்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தொலைத் தொடர்பு நிறுவனம், ஒரு சிறப்பு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது. அதன் மூலம் ஒருவர் தனது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

https://sancharsaathi.gov.in/ என்ற இணைதயதளத்தில் சென்று உங்கள் பத்து இலக்க செல்போன் எண்ணை உள்ளிட்டால் அதற்கு ஒரு ஓடிபி வரும், அதனை பதிவு செய்த பிறகு, உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்தால், உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிம் கார்டுகள் விவரங்கள் தெரிய வரும்.

From around the web