ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு.. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.490 செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி இலவச பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதாவது தீபாவளியை கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 20 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையுடன் இலவச பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் வரும் தீபாவளியையொட்டி இலவச பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கப்பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது.
அதன்படி வரும் தீபாவளியையொட்டி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவச பரிசுத்தொகுப்புக்கு பதில் ரூ.490 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது அரசு ஊழியர் மற்றும் கௌரவ அட்டைத்தாரர்களுக்கு கிடையாது. மாறாக 3 லட்சத்த 37 ஆயிரத்து 406 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கிடைக்கும். இதற்காக ரூ.16.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 13-ம் தேதி புதுச்சேரிக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது. அதாவது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை கொண்டாட மக்கள் தங்களின் சொந்த ஊர் அல்லது வெளியூர் செல்வார்கள். இதனால் தீபாவளி முடிந்து அவர்கள் உடனடியாக ஊர் திரும்ப முடியாது.
இதனால் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த புதுச்சேரி அரசு நவம்பர் 13-ம் தேதியும் அரசு விடுமுறை வழங்கி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.