அவதூறு வழக்கு.. 2 ஆண்டு சிறை தண்டனை... இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனு சூரத் நீதிமன்றத்தில் தள்ளுபடி

 
Rahul Gandhi

அவதூறு வழக்கில் இடைக்கால தடை விதிக்கும்படி தாக்கல் செய்த ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை அடுத்து ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

Rahul Gandhi

இதனையடுத்து அவர் கடந்த 3-ம் தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்ததில், அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார். அத்துடன் ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

அதன்படி 13-ம் தேதி விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு (ஏப்ரல் 20) ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

Rahul-Gandhi

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில், இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் இடைக்கால தடை கிடைப்பது, ராகுல் காந்தி மீண்டும் மக்களவை எம்.பி.யாவதற்கு வழிவகை செய்யும். இந்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

From around the web