கடன் தொல்லை.. வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவன் - மனைவி!
கேரளாவில் கடன் நெருக்கடி காரணமாக கணவனும் மனைவியும், வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அவனீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜீஷ். இவர், கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தவர். இவரது மனைவி ராஜி. கடந்த சில நாட்களாகவே இவர்களுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவனீஸ்வரம் அருகே உள்ள குன்னிக்கோடு என்ற பகுதியில் மினி பேருந்து ஒன்றின் முன்பு பெண் ஒருவர் திடீரென பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரிடம் இருந்த உடைமைகளை பரிசோதனை செய்த போது, அது விஜீஷின் மனைவி 38 வயதான ராஜி என்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அளிப்பதற்காக விஜீஷின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது, அவர் அங்கு இல்லை. இதையடுத்து பல்வேறு பகுதிகளிலும் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆயிரவள்ளி காட்சி முனை அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், தூக்கில் தொங்கிய நபரின் சட்டை பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்த போது, தூக்கில் தொங்கியது விஜீஷ் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை காரணமாக விஜீஷ் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தது தெரியவந்தது. அதற்காக காட்சி முனைக்கு வந்த அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ராஜிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜியும் தற்கொலை செய்ய முடிவெடுத்து, கணவர் இறந்த அதே நேரத்தில் மினி பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.