கட்டணமின்றி ஆதார் அட்டை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. எப்படி புதுப்பிப்பது?
ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. அந்த வகையில், இந்தியா முழுவதும் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். அரசின் பல்வேறு நலத்திட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். பல துறைகளில் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.
ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி வரை கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் செப்டம்பர் 14-ம் தேதிக்குள் ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும். மேலும், செப்டம்பர் 14-ம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள், கட்டணம் செலுத்தி புதுப்பிக்க முடியும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
எப்படி புதுப்பிப்பது?
myAadhaar என்ற போர்ட்டலுக்கு சென்று, Enter Option ஐ- கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீடுகளை உங்களது OTPஐ பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். ஆவண புதுப்பிப்பு (Document Update) என்ற ஆப்சனை கிளிக் செய்து, நெக்ஸ்ட் (Next) ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
“மேலே உள்ள விவரங்கள் சரியானவை என்பதை நான் சரிபார்க்கிறேன்” (I verify that the above details are correct) என்ற கட்டத்தை கிளிக் செய்து, மீண்டும் “நெக்ஸ்ட்” ஆப்சனை கிளிக் செய்யவும். அடையாள சான்று (ID Proof) மற்றும் முகவரிச் சான்று (Address Proof) ஆகியவற்றிற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து “சமர்ப்பி” (Submit) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் அட்டை இலவசமாக அப்டேட் செய்யப்பட்டுவிடும்.
இதற்கு பிறகு, அப்டேட் செய்யப்பட்ட உங்கள் ஆதார் அட்டை ஒரு வாரத்துக்குள் புதுப்பிக்கப்படும்.