டீ போட்டுத் தராத மருமகள்.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மாமியார்.. தெலுங்கானாவில் பரபரப்பு

 
Telangana

தெலுங்கானாவில் டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் மோமின்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீரா பேகம்(28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஜ்மீரா குடும்பத்தினருடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம் (53) வசித்து வந்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், தனது மருமகள் அஜ்மீரா பேகத்திடம் டீ போட்டு தருமாறு ஃபர்சானா பேகம் நேற்று கேட்டுள்ளார்.

Tea

ஆனால், டீ போட்டுத் தரமுடியாது என்று அஜ்மீரா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது டீ வேண்டும் என்று மாமியார் பிடிவாதம் பிடித்ததாக கூறப்படுகிறது. உங்கள் கட்டளையைச் செய்ய நான் வேலைக்காரி அல்ல என்று அஜ்மீரா கூறியுள்ளார். 

இதன்பின் அவர் சமையலறைக்குப் போய் விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஃபர்சானா, அஜ்மீரா பேகத்தின் பின்னால் சென்று தாவணியால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மூச்சுத்திணறி அஜ்மீரா பேகம் உயிரிழந்தார்.

Police

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அத்தாப்பூர் காவல் நிலைய போலீசார், விரைந்து வந்து அஜ்மீரா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக ஃபர்சானா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web