9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டேட்டிங்’ பாடம்.. விளக்கம் அளித்த CBSE!
9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் டேட்டிங் குறித்த பாடம் இடம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் ‘டேட்டிங் மற்றும் உறவுகள்’ என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றதாக செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன. இதை எதிர்த்து கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், பதின்பருவ மாணவர்களுக்கு இத்தகைய பாடம் அவசியமில்லை. எனவே, அவற்றை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அதே சமயம் ஒரு சிலர், இந்த பாடப்பிரிவில் நவீன காலத்தில் இளம்பருவத்தினர் இடையே ஏற்படும் காதல் மற்றும் இணைய நட்பு, இணையதள காதல், சீண்டல் உள்ளிட்டவற்றை விளக்கமாக மாணவர்களுக்கு புரியும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Clarification pic.twitter.com/hNbZdbM5P8
— CBSE HQ (@cbseindia29) February 2, 2024
இந்த நிலையில் இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. அவ்வாறு வெளியாகும் பாடத்தின் உள்ளடக்கம் ககன்தீப் கவுர் எழுதிய ‘சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான வழிகாட்டி’ என்ற புத்தகத்தில் இருந்து வெளியானது. இதனை சி.பி.எஸ்.இ. வெளியிடவில்லை. அதேபோல் எந்த ஒரு தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் சி.பி.எஸ்.இ. பரிந்துரைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.