சிலிண்டர் வெடித்து விபத்து.. 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி.. தேநீர் தயாரித்தபோது நிகழ்ந்த சோகம்!
உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தும்ரி கிராமத்தை சேர்ந்தவர் சிவ்சங்கர் குப்தா. இவரது மனைவி ஆர்த்தி தேவி (35). இந்த தம்பதிக்கு ஆஞ்சல் (14), குந்தன் (12), 11 மாத குழந்தை சிருஷ்டி என்ற 3 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சிவ்சங்கர் வெளியே செல்ல தயாரானார். அவரது மனைவி வீட்டில் தேநீர் தயாரித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் சிவ்சங்கரின் மனைவி ஆர்த்தி தேவி மற்றும் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவ்சங்கர் அறைக்கு வெளியே இருந்தார், இதன் காரணமாக அவர் காப்பாற்றப்பட்டார்.
இந்த சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர், சிலிண்டர் வெடித்து தாயுடன் குழந்தைகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.