மேற்கு வங்கத்தை புரட்டி போட்ட ‘ரெமல்’ புயல்.. வைரல் வீடியோ

 
Remal

மேற்கு வங்கத்தை புரட்டி போட்ட ‘ரெமல்’ புயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றத்தை அடுத்து அதற்கு ‘ரெமல்’ என பெயரிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே மணிக்கு 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் நள்ளிரவில் புயல் கரையை கடக்கக்கூடும் என எச்சரித்தது. புயல் காரணமாக மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் கொல்கத்தா, புர்பா மெதினிபூர், ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில், ‘ரெமல்’ புயல் நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள கேப்புபாரா தீவுக்கும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது.

Remal

இதன்காரணமாக கொல்கத்தா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. குடிசைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. மரங்கள், மின் கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன. இதையடுத்து சேதம் அடைந்த பகுதிகளில் தேசிய மீட்பு படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலைக்குள் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புயல் எச்சரிக்கையை ஒட்டி, மேற்கு வங்க  அரசு பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை முன்கூட்டியே வெளியேற்றியது.வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் ‘ரெமல்’  புயலால் பரவலாக சேதம் ஏற்பட்டுள்ளது. திகா, காக்ட்விப், ஜெய்நகர் போன்ற பகுதிகளில் புயலால் இன்றும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்தகாற்று மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.


விடியவிடிய தொடர்ந்து கனழை பெய்ததால் வீடுகள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சுந்தரவனத்தின் கோசாபா பகுதியில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் காயமடைந்தார். கொல்கத்தாவின் பீபிர் பாகன் பகுதியில், இடைவிடாத மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார். வங்கதேசத்தில் நேற்று இரவு வீசிய சூறாவளிக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் பேரிடர் குழு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

From around the web