ஆந்திராவில் பசுவின் மடியை அறுத்த கொடூர விவசாயி.. இது ஒரு காரணமா?

 
cow

ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்ட பின் அதிக பால் கொடுத்த பசு மாட்டின் மடியை விவசாயி ஒருவர் வெட்டிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் உள்ள ஹிந்துபுரம் அருகே ஸ்ரீ கந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பைரப்பா. விவசாயியான இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். ஏதேதோ காரணத்தால் அந்த பசு சரியாக பால் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தன்னுடைய பசுவை அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கு பைரப்பா விற்று விட்டார்.

Cow

பசுவை வாங்கிய விவசாயி அதை சரியாக பராமரித்து வளர்த்து வந்தார். நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்தால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது. இந்த விஷயம் பைரப்பாவிற்கு தெரியவந்து ஆவேசமடைந்துள்ளார். தன்னிடம் இருக்கும் போது குறைந்த அளவே பால் கொடுத்த அந்த பசுமாடு, விற்பனை செய்த பின் அதிக பால் கொடுத்து தன்னை வஞ்சித்து விட்டதாக மனதிற்குள்ளாகவே குமுறியுள்ளார்.

தன்னிடம் இருந்த போது பசுமாடு ஏமாற்றிய நிலையில், வேறொருவருக்கு விற்றபின் அதிக பால் கொடுப்பதாக எண்ணிய விவசாயியின் மனதில் வஞ்சகம் கூடியது. இதனால், அந்த மாட்டை ஒரு வழி செய்கிறேன் பார், என மனதிற்குள்ளாக வைத்துக்கொண்டு கத்தியுடன் சென்றுள்ளார். விவசாயியின் தோட்டத்தில் இருந்த மாட்டை பார்த்த அவர் ஆத்திரம் தலைக்கேற அதன் மடியை கத்தியால் அறுத்துள்ளார். பசு அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள்ளாக பைரப்பா தப்பியோடி விட்டார்.

Police-arrest

காயமடைந்த பசுவுக்கு முதலுதவி சிகிச்சை செய்த விவசாயி, அதை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இது பைரப்பாவின் வேலையாகத்தான் இருக்கும் என்பதை உறுதி செய்த கிராமத்தினர் அவருடைய வீட்டுக்கு சென்று தேடிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பைரப்பாவை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web