கள்ளக்காதல் ஜோடி வெட்டிக்கொலை.. மகன் வெறிச்செயல்.. கர்நாடகாவில் பயங்கரம்!
கர்நாடகாவில் திருமணமான கள்ளக்காதல் ஜோடி கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் நிடகுந்தி கனி கிராமத்தில் வசித்து வந்தவர் சோமலிங்கப்பா (35). இவரது மனைவி போரம்மா (32). இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்களின் வீட்டின் அருகிலேயே மாவு அரைக்கும் ஆலையை சோமலிங்கப்பா நடத்தி வந்தார்.
இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (38) என்பர் வேலை பார்த்து வந்தார். பார்வதிக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு பீமப்பா தல்வார் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சோமலிங்கப்பாவுக்கும், பார்வதிக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பார்வதிக்கு சிறுநீரகத்தில் பிரச்னை இருந்ததால், நேற்று முன்தினம் பாகல்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சோமலிங்கப்பா அழைத்துச் சென்றார். ஆனால் அதன் பின்னர், அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் இருவரின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தன.
நேற்று காலையில், கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இருவரும் கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்டது தெரிந்தது. கொலை செய்தது யார்? என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதனிடையே பார்வதியின் மகன் லட்சுமண் மாயமாகி உள்ளார். அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது நிடகுண்டி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின், உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். பார்வதியின் மகன் லட்சுமணன் தனது தாயாருக்கும் சோமலிங்கப்பாவுக்கும் உள்ள தகாத உறவால் மனமுடைந்ததாக தெரிகிறது. இருவரையும் எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. திட்டமிட்டு, நேற்று 2 பேரை அழைத்து வருவதாக கூறி, கத்தி, கோடாரியை எடுத்து சென்றுள்ளார்.
ரயிலில் இருந்து இறங்கி ஊருக்கு போன் செய்து பார்த்தபோது நடுவழியில் யாரும் இல்லாததை கண்டு அரிவாள், கோடாரியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு பிறகே சரியான தகவல் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.