தங்கும் விடுதியில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை.. புதுச்சேரியில் பரபரப்பு

 
Cuddalore

புதுச்சேரியில் தனியார் விடுதியில் காதல் ஜோடிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் தவளகுப்பம் பகுதியில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. இதில் தனியார் மதுபான கடை அருகே உள்ள ஒரு விடுதியில் காதல் ஜோடிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தவளகுப்பம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அந்த அறையில் இருந்த மின் விசிறியில் 2 பேரும் துப்பட்டா மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

suicide

இரண்டு பேரின் செல்போன் மூலமாக விபரங்களை போலீசார் சேகரித்தனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் அந்த விடுதிக்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த காதல் ஜோடி என தெரிய வந்தது.

Thavalakuppam PS

குள்ளஞ்சாவடி, அணுகம்பட்டு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் போர்வெல் வேலை செய்து வரும் சுபாஷ் (25), குள்ளஞ்சாவடி, அரசங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவரின் மகள் சபிதா (21) என தெரியவந்தது. கடந்த 6-ம் தேதி சுபாஷ் என்ற வாலிபர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்ததாக தெரிய வருகிறது.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். தனியார் விடுதியில் காதல் ஜோடிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் தவளக்குப்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web