ரீல்ஸ் எடுக்க 8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி.. மேற்கு வங்கத்தில் பகீர் சம்பவம்!!

 
West Bengal

மேற்கு வங்கத்தில் ஐபோன் வாங்கி வீடியோக்கள் எடுப்பதற்காகப் பெற்ற குழந்தையையே தம்பதியினர் விற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்தேவ் கோஷ். இவரது மனைவி சதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில், திடீரென 8 மாதக் குழந்தை காணாமல் போனதாக தம்பதி அக்கம் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதனால், குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்கள். ஆனால், சில தினங்களிலேயே அந்தத் தம்பதி மகிழ்ச்சியாகக் இருந்துள்ளனர். திடீரென அவர்களிடம் ஐபோன் 14 இருந்திருக்கிறது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், காவல் நிலையத்தில் தம்பதி மீது சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்து இருக்கிறார்கள். உடனடியாக போலீசாரும் இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையின் தாய், குழந்தையை விற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டார். ”குழந்தையை விற்ற பணத்தில் ஐபோன் வாங்கியதுடன், வீடியோ காட்சிகள் எடுப்பதற்காகவும் செலவுகள் செய்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

West Bengal

தொடர்ந்து குழந்தையை விற்றவரின் விவரங்களும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரிடமிருந்து குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, குழந்தையின் தாய் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் “இச்சம்பவத்துக்கு இடையே, அந்த ஆண் குழந்தையை விற்றபிறகு, 7 வயது மகளையும் விற்பதற்கு கடந்த 22-ம் தேதி முயற்சி செய்துள்ளார் தந்தை ஜெய்தேவ். தற்போது நல்வாய்ப்பாக அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அம்முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மேலும் தம்பதியினர் இருவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். முக்கியமாக, மது வாங்குவதற்காகத்தான் குழந்தையை விற்றுள்ளனர். போதைப் பழக்கத்தால் இருவரும் அண்டை வீட்டாருடன் கூட அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.

Police

மேலும் போலீசார், “தம்பதியினர் குழந்தையை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து மேற்குவங்கம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். அந்தப் பணத்தில் ஐபோனை வாங்கியதுடன், வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த வழக்கில் குழந்தை கடத்தல் மோசடி ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். ரீல்ஸ் போடுவதற்காக குழந்தையை விற்ற பெற்றோரின் இத்தகைய செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web