அதிகரிக்கும் கொரோனா.. பள்ளி - கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்.. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு

 
Mask

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வருகிறது. புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 ஆக பதிவாகி இருந்தது. புதுச்சேரியை விட காரைக்காலில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த சில வாரங்களாக கொரோனா ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக காரைக்காலில் 3 தினங்களுக்கு முன்பு ஒரு உயிர் பலியாகியுள்ளது. புதுச்சேரியில் தினமும் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் 15 சதவீதம் பேர் தொற்று உறுதி செய்யப்படுவதாக கூறினார்.

Mask

மக்கள் அனைத்து பொது இடங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பார்கள், உணவகங்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை விடுதி, அரசு அலுவலகங்கள், வியாபாரம் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூடங்கள் ஆகிய இடங்களில் பணி செய்பவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யப்பட வேண்டும்.

அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்யப்பட வேண்டும். அரசாங்கத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அனைத்து அறிவுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை அதாவது, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவைகளை உறுதி செய்ய வேண்டும்.

Vallavan

கல்வி நிறுவனங்கள் உரிய செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) கவனமாகப் பின்பற்றி 100% தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வு கூடங்களை முறையாக சுத்தப்படுத்தப்படுவதையும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் கிருமி நாசினிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

தேர்வின் போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் முகக்கவச பயன்பாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு பொருந்தும் என கூறிய அவர், தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது என கூறினார்.

From around the web