மீண்டும் கொரோனா.. 9 பேருக்கு தொற்று உறுதி.. பீதியில் புதுச்சேரி மக்கள்!
புதுச்சேரியில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில், 9 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று முற்றிலும் குறைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர்.
இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த 43 நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் கொரோனா மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் 43 பேருக்கு நடத்திய சோதனையில், புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதில், ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 6 பேர் வீட்டு தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.