மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.. மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட உடல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி. மாநிலங்களவை உறுப்பினராகவும், கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி மறைந்த செய்தி இடதுசாரி அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினர், இடதுசாரிகள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த சீதாராம் யெச்சூரி உடலை அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) ஆகஸ்ட் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று (செப்.12) பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக அவரது உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியலுக்கு தனது உடலை தானம் செய்ததன் மூலம், கடந்த காலங்களில் உடல் தானம் செய்த இடதுசாரி தலைவர்களின் நீண்ட பட்டியலில் சீதாராம் யெச்சூரியும் இணைந்துள்ளார். வாழும் காலத்தில் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் தலைவர்கள், மறைந்த பிறகும் கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மாணவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன்படுகின்றனர்.