கல்லூரி மாணவனை 30 முறை கத்தியால் குத்திக்கொன்ற கொடூரன்.. பீகாரில் பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

 
Bihar

பீகாரில் கல்லூரி மாணவனின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி மர்ம நபர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் நவடா மாவட்டம் ஷிவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்குமார் (20). இவர் குஜராத் மாநிலம் வாரணாசியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இதனிடையே, ராகுல்குமார் சொந்த ஊரில் நடைபெறும் சாத் பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க ஷிவ் நகர் வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த ராகுல்குமாருக்கு இன்று செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியே சென்ற ராகுல்குமார் கிராமத்தில் உள்ள சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

Murder

அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ராகுல்குமார் முகத்தில் வீசினார். பின்னர், தான் வைத்திருந்த கத்தியால் ராகுல்குமாரை 30 முறை சரமாரியாக குத்தினார். இந்த கொடூர தாக்குதலில் ராகுல்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பட்டப்பகலில் சாலையில் இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொல்லப்பட்ட ராகுல்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவனை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொல்லப்பட்ட மாணவன் ராகுல்குமாரின் தாயார் பீகாரின் முன்கர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் என்பதால் முன்விரோதம் காரணமாக மாணவன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web