மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கழன்று ஓடிய பெட்டிகள்.. பரபரப்பு வீடியோ!
மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மாடில் இருந்து மும்பைக்கு நேற்று அதிகாலை 6.02 மணிக்கு 22 பெட்டிகளுடன் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயில் நேற்று காலை 8.36 மணிக்கு மும்பை அருகே உள்ள கசாரா ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கு இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் இருந்து 4 மற்றும் 5-வது பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கழன்றது. இதனால் என்ஜினுடன் முதல் 4 பெட்டிகள் மட்டும் சென்றன.
பெட்டிகள் கழன்று ஓடியதை கவனித்த என்ஜின் டிரைவர் சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தினார். இதன் காரணமாக தனியாக கழன்று ஓடிய பெட்டிகள், முன்னால் சென்ற என்ஜின், பெட்டிகள் மீது மோதாமல் சிறிது தூரத்தில் நின்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். சம்பவத்தின்போது ரயில் குறைந்த வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முன்னால் சென்ற என்ஜின் மற்றும் பெட்டிகள் பின்னோக்கி கொண்டு வரப்பட்டது.
Coaches of the #Mumbai-bound #PanchavatiExpress uncoupled after the train crossed Kasara Railway Station.
— Voice of Assam (@VoiceOfAxom) July 6, 2024
All the passengers on the train were safe. The train resumed its journey after 40 minutes. pic.twitter.com/Wi735AZPWZ
பின்னர் கழன்ற 4, 5-வது பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. அதன்பிறகு அங்கு இருந்து ரயில் புறப்பட்டது. பெட்டிகள் கழன்ற சம்பவத்தால் மன்மாட் - மும்பை சி.எஸ்.எம்.டி. பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக அங்கு இருந்து புறப்பட்டது. ரயில் பெட்டிகள் கழன்ற சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.