சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி பரிதாப பலி... அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தின் அப்சல்பூர் தாலுகாவில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7 வயது சிறுமியான மஹாந்தம்மா ஷிவப்பா தலவார் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16-ம் தேதி பள்ளியில் உள்ள சமையலறையில் மதிய உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, மாணவி சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.
40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி, உடனடியாக சவுதாபூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவிக்கு, முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கலபுராகியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவியின் உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ பிரிவின் கீழ் (அலட்சியத்தால் மரணம்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஊழியர்கள் இருவர் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் தலைமைச் சமையல்காரர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.