நிறத்துக்காக சேர்க்கப்படும் ரசாயனம்.. புற்றுநோய் ஏற்படும் அபாயம்.. நஞ்சாய் மாறிய பஞ்சுமிட்டாய்!!

 
Cotton Candy

புதுச்சேரியில் இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்யில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுடித்து பறிமுதல் செய்துள்ளது.

அண்டா போன்ற பாத்திரத்தில் ஒரு குச்சியை எடுத்து சுழற்றி, சிறிய சத்தம் எழ காற்றில் பறக்கும் இறகென, குச்சியை நிறைத்து பூ போல நீட்டுவார் பஞ்சுமிட்டாய் வியாபாரி. ரோஸ் கலர் பூசிய சிறிய மேகத்தை ஏந்தியிருப்பது போல, பஞ்சுமிட்டாயைக் கைகளில் பிடித்தபடி குட்டி ஆச்சர்யமாக அதை பார்த்து நிற்போம். நாவில் பட்டதும் சர்க்கரை சுவை பரவத்தெடங்கி கரைந்துருகும் அந்த ரோஸ் கலர் மேகம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பஞ்சு மிட்டாய் விருப்பமான ஒன்றாக இருக்கும். திருவிழா, பொருட்காட்சி ,பூங்கா என பல இடங்களிலும் நம் கண்களில் ஒருமுறையாவது தட்டுப்பட்டுவிடும். நம்மில் பலருக்கும் குழந்தை பருவத்தில் பஞ்சு மிட்டாயோடு ஒரு கதை இருக்கும். இந்த பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Cotton Candy

புதுச்சேரி கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் இந்த பஞ்சுமிட்டாயை விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் தீப்பெட்டி மற்றும் ஊதுவத்தி ஆகியவை நிறம் பெறுவதற்காக சேர்க்கப்படும், ரோடமின் பி என்ற ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரசாயனத்தை உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. குறைந்த விலைக்கு கிடைப்பதால் இதனை பஞ்சுமிட்டாய் வியாபாரிகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பஞ்சுமிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மட்டுமல்லாது புதுச்சேரி முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனையில் ஈடுபட்டுவருபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Cotton Candy

இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “புதுச்சேரியில் ஆய்வின் போது பஞ்சுமிட்டாயில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனவே பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இனி பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய வேண்டும் எனில் உணவு பாதுகாப்பு துறையின் தர சான்றிதழ் அவசியம் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சில வியாபாரிகள் தமிழ்நாட்டில் இருந்து பொருட்களை வாங்கி வந்ததாக கூறியிருக்கிறார்கள். எனவே அங்கும் இதுபோன்று சோதனை நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்களிடம் இருந்து பஞ்சுமிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பல்லாவரத்தில் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் ஆலை இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

From around the web