சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து.. சைதை துரைசாமியின் மகன் மாயம்.. தேடும் பணி தீவிரம்

 
vetri duraisamy vetri duraisamy

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் மூழ்கி அவர் மாயமாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆரின் அபிமானி, அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் சைதை துரைசாமி. சென்னைக்கு 48-வது மேயராக சைதை துரைசாமி 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அதிமுகவின் முதல் சென்னை மேயர் சைதை துரைசாமி என்ற பெருமையை பெற்றார். இவர் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர்.

Vetri Duraisamy

இந்த நிலையில், வெற்றி துரைசாமி திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சட்லஜ் ஆற்றின் அருகே மலைப்பாங்கான பகுதியில் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் நேற்று காரில் சென்றுள்ளார். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் பலியானார். காரில் பயணித்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமி மாயமானார். கார் ஆற்றுக்குள் கவிழ்ந்தபோது வெற்றி துரைசாமி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த கோபிநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த கார் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

From around the web