டிரக் மீது கார் மோதி கோர விபத்து.. குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
உத்தரபிரதேசத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த டிரக் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் காரின் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் மாட்டிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். அத்துடன் பற்றி எரிந்த காரில் இருந்த நெருப்பை அணைத்த போது, காருக்குள் 8 பேரின் உடல்களும் கருகி கிடந்தன.
இந்த விபத்து குறித்து பரேலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் கருகி உயிரிழந்தவர்கள், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பஹாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
விபத்து குறித்து பரேலி எஸ்எஸ்பி குலே சுஷில் சந்திரபான் கூறுகையில், “காருக்குள் இருந்த 8 பயணிகளும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.