2 ரூபாய்க்கு கேன்சர் மருந்து.. உலகையே வியக்கவைத்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை!

 
Cancer

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு 2 ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் இதய நோய்க்கு அடுத்தபடியாக பெரும்பாலான மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது புற்றுநோய் தான். 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் இந்த கொடிய புற்றுநோயால் இறந்துள்ளனர். இப்படி புற்றுநோயால் மக்கள் அதிகமாக இறப்பதற்கு முக்கிய காரணம், இன்னும் நிறைய பேருக்கு புற்றுநோயின் அறிகுறிகள் தெரியாமல் இருப்பது தான்.

அதுவும் பெரும்பாலான புற்றுநோயின் அறிகுறிகள் நாம் தினசரி சந்திக்கும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். இதன் காரணமாக பலரும் அந்த புற்றுநோயின் அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து புறக்கணித்துவிடுகிறார்கள். பின் முற்றிய நிலையில் மருத்துவரை அணுகி, சிகிச்சை அளிக்க முடியாமல் மரணத்தை பரிசாக பெறுகிறார்கள்.

Jipmer

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜிப்மர் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்திய நாடு தற்போது புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்புகளினால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாகவும் உள்ள இவ்வியாதிக்கு கை கொடுப்பது ஆராய்ச்சிகள் மட்டுமே. புற்றுநோய் சிகிச்சையானது மூன்று சிகிச்சை முறைகளை கொண்டது. அவை மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகும். இவை அனைத்திலும் மருத்துவ முன்னேற்றத்துக்காக ஆராய்ச்சிகள் செய்து வரப்படுகிறது. மற்ற உலக நாடுகளில் இந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சிகள் 20-30 வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும், இந்தியாவில் இந்த ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடத்தப்படுகின்றன.

பல இடங்களில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக கலந்து செய்யும் ஆராய்ச்சிகளே (Multicenter research) சிகிச்சையில் மாற்றங்களை தரவல்லது. இதுபோன்ற ஆராய்ச்சிகளை இந்திய நாட்டில் அதிகரிப்பதால் ஆக்கபூர்வமான பல சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்க உதவிடும். இதனை கருத்தில் கொண்டு பயோடெக்னாலஜி ஆராய்ச்சி உதவி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் (BIRAC), இந்திய அரசின் கீழ், அதன் முதன்மைத் திட்டமான நேஷனல் பயோஃபார்மா மிஷன் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளின் பங்களிப்பை கோரியுள்ளது. இதன் ஒரு முயற்சியாக, Network of Oncology Clinical Trials India (NOCI) என்ற கூட்டமைப்பு ஜிப்மர் மருத்துவமனையை தலைமையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

cancer

ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.9.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 6 மருத்துவமனைகள் பங்கேற்று உள்ளன. இக்குழு 6 விதமான புற்றுநோய்களின் விவரங்களை பல தரப்பட்ட நோயாளிகளிடமிருந்து சேகரித்து வருகிறது. மேலும், இக்குழு தங்களுடைய மருத்துவமனைகளில் மருத்துவ ஆராய்ச்சி பரிசோதனைகளையும் துவங்கி உள்ளது. இதன்மூலம் நோய்க்கான சுலபமான தீர்வுகளையும், மருந்து தயாரிப்புக்கான பரிந்துரைகளையும் அளிக்க ஏதுவாக அமையும்.

இவ்வாறு சமீபத்தில் ஜிப்மர் மருத்துவமனையின் ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதோடு, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியும் இதனை பசியின்மையால் அவதியுறும் கீமோதெரபி நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறது. ஆராய்ச்சி மேம்பாட்டினை நோக்கமாக கொண்டு என்ஓசிஐ குழுவானது இதுபோன்ற ஆராய்ச்சி பரிசோதனைகளின் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள், காணொளிகள் ஆகியவற்றின் மூலமாக எடுத்துரைத்து வருகிறது. இக்குழு புற்றுநோய் பற்றிய தகவல்களை தங்களுடைய இணையதளத்தில் (https://noci-india.com) பதிவிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web