நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் கவிழ்ந்த பேருந்துகள்.. 7 இந்தியர்கள் உள்பட 65 பேர் மாயம்.. தேடும் பணி தீவிரம்
நேபாளத்தில் ஆற்றில் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் 7 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்- மக்லிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
காத்மாண்டு நோக்கிச் செல்லும் ஏஞ்சல் பேருந்தில் 24 பேர் இருந்த நிலையில், நேபாளத் தலைநகரில் இருந்து கவுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணபதி டீலக்ஸில் 41 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன இந்தியர்கள் சந்தோஷ் தாக்கூர், சுரேந்திர சா, ஆதித் மியான், சுனில், ஷாநவாஜ் ஆலம் மற்றும் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கணபதி டீலக்ஸ் பேருந்தில் இருந்த 3 பயணிகள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியதாக கூறப்படுகிறது. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, உடனடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உத்தரவுகளை வழங்கினார்.
#Nepal: At least 60 passengers, including 7 Indians, are missing after two buses were swept away by the Trishuli River in Simaltal, Chitwan Ikshakamana.#Flood #nepalbusaccident #NEPALBUS #zadakhabar pic.twitter.com/VxuGiB2eGX
— zadakhabar (@zadakhabar) July 12, 2024
இந்த நிலையில், ஆற்றில் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் 7 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற பயணிகளின் நிலை என்ன? என்று தெரியவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.