குழந்தை கண்முன்னே காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்.. உத்தர பிரதேசத்தில் பகீர் சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் தனது பிள்ளைகளின் கண்முன்னே, மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் மிஸ்ரா (37). இவர் டூர் மற்றும் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி மோனிகா குப்தா. இந்த தம்பதிக்கு அன்ஷிகா (12) என்ற மகளும் அதர்வா (5) என்ற மகனும் உள்ளனர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்தது. குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி பதிவுகள் போட்டு வந்தார். அவரது பதிவுகளுக்கு அதிக லைக்குகள் வந்தன. மேலும் அவருக்கு பாலோவர்கள் அதிகமானோர் உருவானார்கள். இதனால் அவர் அதிகநேரம் இன்ஸ்டாகிராமில் செலவழித்தார்.
இது ராகுலுக்கு தெரியவந்தது. அவரும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தார். தன்னைவிட அதிக பாலோவர்கள் மனைவிக்கு இருக்கிறார்களே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குள் ஏற்பட்டது. மேலும் பாலோவர்களில் சிலர் மனைவியை சந்திப்பதாகவும் சந்தேகப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராகுல் தனது மனைவி, குழந்தைகளுடன் ரேபரேலிக்கு இனோவா காரில் சென்றார்.
பூர்வாஞ்சல் சாலையில் முஜ்ஏஸ் சதுக்கம் அருகே வந்தபோது காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆவேசமாக தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்பு குழந்தைகளுடன் காரில் அமர்ந்திருந்தார். அப்போது அந்தவழியாக சென்ற போலீஸ் ரோந்து குழுவினர் அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது ராகுலின் குழந்தைகள் தாயை கொலை செய்ததை கூறினார்கள். இதையடுத்து போலீசார் ராகுலை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட பொறாமையிலும், பாலோவர்கள் சிலரை ரகசியமாக சந்தித்ததாலும் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து ராகுல் மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.