தம்பியை சுத்தியலால் அடித்துக் கொன்ற அண்ணன்.. செல்போன் கொடுக்க மறுத்ததால் விபரீதம்!
கர்நாடகாவில் செல்போன் கொடுக்க மறுத்த தம்பியை, அண்ணனே சுத்தியலால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி சன்னம்மா. இந்த தம்பதிக்கு சிவக்குமார் (18) மற்றும் பிரானேஷ் (14) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தனர். சிவக்குமார் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு பெற்றோருடன் கூலி வேலை செய்து வந்தார். அதே சமயம் அவரது சகோதரர் பிரானேஷ், ஆந்திராவில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
இதற்கிடையே கோடை விடுமுறை என்பதால் பிரானேஷ், பெற்றோரை பார்க்க வந்தான். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறநகர் பகுதியில் தலை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் பிரானேஷ் பிணமாக கிடந்தான். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சர்ஜாப்புரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரானேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் விசாரணையில், ஆயுதத்தால் தாக்கி சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. ஆனால் கொலைக்கான காரணம் முதலில் தெரியவில்லை. அப்போது பிரானேசின் சகோதரர் சிவக்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் சிவக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது சிவக்குமாருக்கு செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இதற்கிடையே சிவக்குமாரின் செல்போனை சகோதரன் பிரானேஷ் வாங்கி விளையாடி வந்துள்ளான். செல்போனை கொடுக்கும்படி சிவக்குமார் தம்பியை எச்சரித்துள்ளார். ஆனால் பிரானேஷ் செல்போனை கொடுக்கவில்லை என தெரிகிறது.
செல்போன் கொடுக்க மறுத்ததால் சகோதரரை தீர்த்து கட்டுவதற்கு சிவக்குமார் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது தனது சகோதரரை அருகில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிவக்குமார் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து தான் எடுத்து வந்த சுத்தியலால் பிரானேசை தலை, வயிற்றில் சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் தலை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பிரானேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் தான் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.