காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொலை செய்த காதலன்; கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Aug 29, 2023, 14:14 IST

கர்நாடகாவில் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்து காதலியை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பேகூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நியூ மைக்கோ லேஅவுட் பகுதியில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பேகூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் “கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் தேவா (24). இவரும் அதே மாநிலத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் (24). என்பவரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்கள்.

கேரளாவில் இருவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்துள்ளனர். பின்னர் இவர்கள் காதலித்தாக கூறப்படுகிறது. மேலும் இவர்களின் காதல் இருவரின் பெற்றோருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. பெங்களூருவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வரும் இவர்கள் லிவ் - இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சமீப காலமாக தேவாவிற்கு வேறு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக வைஷ்ணவ் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) மாலை மீண்டும் ரதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வைஷ்ணவ், பிரஷர் குக்கரைக் கொண்டு தேவாவின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த இளம்பெண் தேவா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மாலை 4.30 முதல் 5.30 மணிக்குள் இடம் பெற்றுள்ளது” என்று டிசிபி சி.கே பாபா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேகூர் காவல் நிலைய போலீசார் குற்றம் சாட்டப்பட்ட வைஷ்ணவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.