பிரபல உணவகத்தில் வெடித்த வெடிகுண்டு.. 4 பேர் காயம்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Karnataka

கர்நாடகாவில் பிரபல உணவகம் ஒன்றில் மர்ம பொருள் வெடித்து சிதறிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் இயங்கி வருகிறது. இந்தப் பெயரில் நகரெங்கும் பல கிளைகள் இயங்குகின்றன. மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும் இந்த உணவகத்தின் ராஜாஜி நகர் கிளையில் இன்று மதியம் 1 மணி அளவில் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, உணவக ஊழியர்கள் மூன்று பேர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் என 4 பேர் படுகாயம் அடைந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒயிட்ஃபீல்டு போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், சிலிண்டர் விபத்து எதுவும் நேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Karnataka

சம்பவம் நடந்த இடத்தை துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவல்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர் இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பிறகு டி.கே.சிவக்குமாா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, குண்டு வெடிப்பு நிழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டோம். போலீசார் இங்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார், வெடிகுண்டு தடுப்பு போலீசார், தடய அறிவியல் சோதனை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். குறைந்த திறன் கொண்ட குண்டு வெடித்துள்ளது.  

மதியம் 12 மணிக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு பையை அங்கு வைத்துவிட்டு சென்றுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதில் இருந்து குண்டு வெடித்துள்ளது. அந்த நபரை போலீசார் சில மணி நேரத்தில் கைது செய்வார்கள். இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

எந்த வகையான விசாரணைக்கும் தயாராக உள்ளோம். பெங்களூரு மக்கள் பயப்பட தேவை இல்லை. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களையும் நாங்கள் நேரில் பார்த்து பேச உள்ளோம். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. பாஜகவினர் விமர்சிக்கிறார்கள். அவர்களின் ஆட்சி காலத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடந்தது. அதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை என்று கூறினார்.

From around the web