மூளையில் ரத்தபோக்கு.. மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குணமடைந்து வருகிறேன் என வீடியோ வெளியிட்ட சத்குரு!
டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் அண்மையில் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்மற்றும் 3 மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 4 வாரங்களாக தலைவலி இருந்த நிலையிலும் மகா சிவராத்திரி விழா மற்றும் டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சத்குரு கலந்துகொண்டார்.
இந்த சூழலில் தலைவலி காரணமாக ஜக்கி வாசுதேவ், டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் சத்குருவின் மூளையில் ரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனையடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். இருப்பினும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.
இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 4 வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மகாசிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார். சில நாட்களுக்கு முன்பு சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sadhguru had a life threatening issue, had a surgery and is recovering. He certainly hasn’t lost his sense of humour. Wishing a quick and complete recovery 🙏 pic.twitter.com/9Ugl9fhJ79
— Smita Prakash (@smitaprakash) March 20, 2024
மேலும் இதுகுறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.