ஆங்கிலேயர் ஆட்சியை விட மோசமானது பாஜக ஆட்சி... அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசம்!!

இன்றைக்கு நாட்டை ஆளும் பாஜகவினரின் ஆட்சி ஆங்கிலேயரின் ஆட்சியை விட மோசமானது என்று டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித்தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார்.
“ஆங்கிலேயர்களை அகற்றினால் மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும் எனவும், இல்லையென்றால் நம்மவர்கள் ஆங்கிலேயரை விட மோசமாக இருப்பார்கள் என பகத்சிங் பலமுறை கூறியுள்ளார். அவர் சொன்னது சரியாக உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்து 48 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து அம்பேத்கர், பகத்சிங் படங்களை அகற்றியுள்ளனர்.கத்சிங்கை விட இந்த நாட்டுக்காக அதிக தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்களா?அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் கனவுகளை நனவாக்கவே ஆம் ஆத்மி அரசியலுக்கு வந்து இருக்கிறது. அதிகாரத்திற்காக வரவில்லை.
டெல்லியில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தில் மாநில அரசு கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. செல்போன் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தால் மட்டுமே இலவச டிக்கெட்டுகளை பெண்களுக்கு வழங்குகிறார்கள். பயணிகளுக்கான வசதிகளை அதிகரிப்பதற்கு பதிலாக ஏற்கனவே இருப்பதையே திரும்பப்பெற்று வருகின்றனர். மகளிருக்கு .2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது” என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்