ரயிலில் சிக்கி வங்கி ஊழியர் பலி.. திருடனை பிடிக்க முயன்றபோது நேர்ந்த விபரீதம்!
மகாராஷ்டிராவில் செல்போனை பறித்துக்கொண்டு ஓடிய திருடனை பிடிக்க முயன்ற வங்கி அதிகாரி ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் (24). இவர், தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக மும்பை வந்திருந்தார். இதன் பின்னர் சம்பவத்தன்று புனே செல்ல சித்தேஷ்வர் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் வாசல் அருகே நின்றபடி செல்போன் பேசிக்கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது.
ரயில் கல்யாணை தாண்டி விட்டல் வாடி ரயில் நிலையம் அருகே மெதுவாக சென்ற போது, அவர் அருகே நின்ற ஆகாஷ் ஜாதவ் (27) என்ற வாலிபர் திடீரென அவரிடம் செல்போனை பறித்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இதனைக் கண்ட அதிர்ச்சி அடைந்த பிரபாஸ் செல்போன் திருடனை பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். அப்போது பிரபாஸ் எதிர்பாராத விதமாக ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடன் ஆகாஷ் ஜாதவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அம்பிவிலி ரயில் நிலையத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.