புதுச்சேரியில் பந்த்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருக்கிறார்.
புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இடையில் மக்களவைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டதால் மின் கட்டண உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முன் தேதியிட்டு மின் கட்டண உயர்வை அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தன. குறிப்பாக மேலும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2-ம் தேதி ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடைபெற்ற நிலையில் 18-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 200 யூனிட்களுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தப்படும் பயனர்களுக்கு யூனிட்டுக்கு 85 பைசா வரை மானியமாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. ஆனாலும் மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.
மற்ற மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், புதுச்சேரியில் மற்ற மாநிலங்களை விட குறைவாகவே இருப்பதாகவும், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என அரசு விளக்கம் அளித்தது. இருந்த போதும் அரசின் விளக்கத்தை ஏற்காத எதிர்க் கட்சிகள், மின் கட்டண உயர்வுக்கு எதிராக திட்டமிட்ட படி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டத்தை முன்னிட்டு வியாபாரிகள், வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பல தரப்பு மக்களிடம் இந்தியா கூட்டணி ஆதரவு திரட்டியது.
மேலும் கூட்டணியில் இருக்கும் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் நிறைய தொழிற்சங்கங்களை வைத்திருப்பதால் நாளை வாகனங்கள் இயங்காது என கூறப்படுகிறது. ஆளும் கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் மட்டும் பணிக்கு வரும் நிலையில், சில அரசு பேருந்துகள் மட்டும் இயங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏவான ஜான் குமார், “நாளை முழு அடைப்பு போராட்டம் காரணமாக பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்காது என கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அளித்து முதல்வர் உத்தரப்பட்டுள்ளார்” என வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளார்.