வெங்காய ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு.. ஒன்றிய அரசு அறிவிப்பு

 
Onion

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காயம் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டிருந்த தடை அடுத்த அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயைக் கடந்தது.  சின்ன வெங்காயத்தின் விலை சில இடங்களில் 200 ரூபாயைத் தாண்டியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த கடும் விலை உயர்வை தொடர்ந்து ஒன்றிய அரசு, தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவித்ததோடு, வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கடந்தாண்டு டிசம்பர் 8-ம் தேதி முதல் தடை விதித்தது. மேலும்  நுகர்வோருக்கு உதவும் வகையில், சில்லறை சந்தையில் கிலோவுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் வெங்காய விற்பனையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது.

அதன் பிறகு வெங்காயத்தின் விலை குறைந்து தற்போது கிலோ 24 ரூபாய் என்கிற அளவில் விற்கப்படுகிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெங்காயம் விலை மீண்டும் உயரலாம் என்று ஒன்றிய அரசு கருதுகிறது. அதைத்தொடர்ந்து நாட்டிற்குள் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் ஒன்றிய அரசு வெங்காய ஏற்றுமதி தடையை இம்மாத இறுதி வரை நீட்டித்திருந்தது.

Onion

இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் வெங்காய ஏற்றுமதியில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக, இந்தியாவிலிருந்து தான் வெங்காய ஏற்றுமதியாகிறது. கடந்த மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலிருந்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Onion

இந்நிலையில், அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் தொடங்கி இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியை அதிகமாகச் சார்ந்திருக்கும் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேற்கண்ட நாடுகளில் வெங்காய விலை ஏற்றத்தைக் கண்டுள்ளதால் சீனா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web