சிக்கிமில் திடீர் பனிச்சரிவு... சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி.! 80பேர் கதி என்ன?

சிக்கிம் எல்லைப் பகுதியில் திடீர் பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. மிக முக்கிய சுற்றுலாத் தலமாக திகழந்து வருகிறது. இந்நிலையில் நாதுலா எல்லை பகுதியில் இன்று பிற்பகல் திடீரென மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் சிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 4 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை இந்த பனிச்சரிவில் சிக்கி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தலைநகர் கேங்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பனிச்சரிவில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சிக்கிம் காவல்துறை உயர் அதிகாரி சோனம் டென்சிங் பூட்டியா கூறுகையில், “நாதுலாவின் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள 15வது மைல் அருகே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பனியால் மூடப்பட்டது. இதுதவிர மேலும் பலர் பனியில் மூழ்கினர். இப்படி உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என மொத்தம் 150 பேர் பனிச்சரிவில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது.
இந்த விபத்தில் 4 ஆண்கள், 1 பெண் மற்றும் 1 குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை 30 சுற்றுலாப் பயணிகளை மீட்கப்பட்டுள்ளோம். மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. எங்களுடன் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் இணைந்துள்ளர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் சம்பவயிடத்துக்கு விரைந்துள்ளன. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுபோன்ற வீடியோக்களை யாரும் வீடியோ பகிர வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
Six dead & many injured after #avalanche hit at 15 mile along the Jawaharlal Nehru (JN) road that connects #Gangtok with #Nathula Pass in #Sikkim.#Tsomgo pic.twitter.com/dEdWZ69aiz
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) April 4, 2023
இதே சிக்கிம் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்னர் சாங்கு ஏரி பகுதிக்கு செல்லும் பகுதியில் கடும் பனிப்பொழிவில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கினர். ஆபரேஷன் ஹிம்ராஹத் பெயரில் சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.