இனி ஆகஸ்டு 23-ம் தேதி தேசிய விண்வெளி தினம்.. பிரதமர் மோடி அறிவிப்பு!

 
Modi - ISRO

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கிய நாள் தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பியதும் நேராக இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை பெங்களூருக்கு வந்தார். தொடர்ந்து, இஸ்ரோ நிறுவனத்திற்கு வந்த பிரதமரை அதன் தலைவர் சோம்நாத் மற்றும் பிற விஞ்ஞானிகள் நேரில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

chandrayaan 3

அவர்களுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இதன்பின்பு, விண்கலம் செயல்பாட்டு பணிகளை குறித்து பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கி கூறினார். இதேபோன்று பிரதமர் மோடி, பெண் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர் பேசும்போது, சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய பகுதியை சிவசக்தி முனை என பிரதமர் மோடி குறிப்பிட்டார். சந்திரயான்-2 விண்கலம் நிலவில் மோதிய பகுதி திரங்கா முனை என அழைக்கப்படும் என கூறினார். தொடர்ந்து அவர், சந்திரயான்-3 விண்கல திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றினர்.

Modi

மக்களின் நலனுக்காக அறிவியலை பயன்படுத்துவதற்கு இந்த சிவசக்தி விசயம் வரவிருக்கிற தலைமுறைக்கு ஓர் உந்துதலாக இருக்கும். மக்களின் நலனே நம்முடைய உச்சபட்ச உள்ளார்ந்த விசயம் ஆகும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என்றும் அறிவித்துள்ளார்.

From around the web