மாணவர்கள் கவனத்திற்கு..! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

 
Neet

2023-ம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மார்ச் 6-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில் கடந்த 6-ம் தேதி நிறைவு பெற்றது.

Neet

இந்த நிலையில் தற்போது இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வுக்கு நாளை முதல் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி இரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Neet

3 மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், உயிரியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.

கேள்விகள் பல்குறித்தேர்வு (Multiple choice Questions) வினாக்களாக இருக்கும். அதாவது, ஒவ்வொரு வினாவிற்கு சரியான விடை உட்பட நான்கு விடைகள் இடம்பெறும். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா, உருது, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும். விண்ணப்பிக்கும் போதே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

From around the web