மின்மாற்றி வெடித்ததில் 16 பேர் பலி.. உத்தரகாண்ட்டில் நடந்த சோகம்!!
உத்தரகாண்ட்டில் மின்மாற்றி வெடித்து 3 போலீஸ்காரர் மற்றும் 3 ஊர்க்காவல் படையினர் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் நமாமி கங்கை திட்டத் தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை இங்கு 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது மின்மாற்றி வெடித்துச் சிதறியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், இறந்தவர்கள் அனைவரும் நீர்மின் திட்டப்பணியில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
உத்தரகாண்ட் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் வி.முருகேசன் கூறுகையில், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 ஊர்க்காவல் படையினர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. தண்டவாளத்தில் மின்சாரம் பாய்ந்து உள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இந்த விபத்து குறித்துப் பேசிய உத்தரகாண்ட் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) அசோக் குமார், “இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பிபால்கோட்டியின் புறக்காவல் நிலைய ஊழியரும் அடங்குவார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.