மின்சாரம் தாக்கி 15 சிறுவர்கள் காயம்.. மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் விபரீதம்!

 
Rajasthan

ராஜஸ்தானில் சிவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிவபெருமான் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 15 குழந்தைகள் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்காக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடியிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் 20 அடி நீளமுள்ள இரும்பு பைப் ஒன்றை வைத்திருந்தான். அந்த பைப் எதிர்பாராத விதமாக அப்பகுதி வழியாகச் சென்ற மின் கம்பத்தில் பட்டது. 

electric shock

இதனால் சிறுவனை மின்சாரம் தாக்கியது. உடனே அவனை காப்பாற்ற அங்கு நின்ற மற்ற சிறுவர்களும் முயன்றனர். இதனால் அவர்களையும் மின்சாரம் தாக்கியது. மொத்தம் 15 குழந்தைகள் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டனர். ஊர்வலத்திற்கு வந்திருந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை தூக்கிக்கொண்டு அங்குள்ள மருத்துவமனைக்கு ஓடினர். 

இது குறித்து கோட்டா போலீஸ் கண்காணிப்பாளர் அம்ரிதா கூறுகையில், “மின்சாரம் தாக்கி காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிறுவனுக்கு 100 சதவிகிதமும், மற்றொரு சிறுவனமும் 50 சதவிகிதம் அளவுக்கும் உடல் எரிந்துள்ளது. 100 சதவிகிதம் உடல் எரிந்த சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றார். 

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குச் சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பார்வையிட்டு, நலம் விசாரித்தார். போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹீரலால் அளித்த பேட்டியில், “நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையளிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

From around the web