அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.. உச்சநீதிமன்றம் உத்தரவு

 
Arvind Kejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Arvind-Kejriwal

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10-ம் தேதி (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் , டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம். முதல்வராக  அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி சரணடைய வேண்டும் எனவும் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme Court

கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன:

* இடைக்கால ஜாமீன் பெற்ற கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.

* சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு குறித்து கெஜ்ரிவால் கருத்து கூறக்கூடாது.

* இடைக்கால ஜாமீன் தொகையாக ரூ.50,000 செலுத்த வேண்டும்.

* அலுவலகம் சார்ந்த கோப்புகளில் கெஜ்ரிவால் கையெழுத்து போடக்கூடாது.

என்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகள் விதித்துள்ளது.

From around the web