அமெரிக்கா திருப்பி அனுப்பும் இந்தியர்களின் கால்களில் சங்கிலியா? ப.சிதம்பரம் கேள்வி!!

அமெரிக்காவில் பிரதமர் மோடி முன்னிலையிலே இந்தியா கூடுதல் வரி விதிக்கிறது. அமெரிக்காவும் அதே வரி விதிக்கும் என்று கூறினார் அதிபர் ட்ரம்ப். அதே நேரத்தில் அமெரிக்காவிடமிருந்து ராணுவ விமானங்களை வாங்கும் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டது. அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாகக் குடியேறிய இந்தியர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்வோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் நோக்கி பறந்து வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக 104 இந்தியர்களை அழைத்து வந்த போது கைகளிலும் கால்களிலும் விலங்கு மாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வரும் 119 இந்தியர்கள் கண்ணியமாக கொண்டு வரப்படுகிறார்களா என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது அமெரிக்க விமானம் 119 இந்தியர்களை இன்று கொண்டு வருகிறது அந்த 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா என்பதே கேள்வி அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா? இந்திய ராஜதந்திரத்திற்குப் பெரிய சவால் இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும், இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பம்" என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.