ஆந்திர ரயில் விபத்து.. டிரைவர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம்.. அமைச்சர் திடுக் தகவல்

 
Andhra

ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ரயில் விபத்திற்கு ரயிலின் ஓட்டுநரே காரணம் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகபள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி ராயகடா பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது. முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதி இந்த விபத்து நேரிட்டது.

MObile

இந்த கோர விபத்தில் பயணிகள் 14 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு ரயிலின் லோகோ பைலட்கள் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்ததே காரணம் என்று  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே மேற்கொண்டு வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, “ஆந்திர மாநிலத்தில் 2 ரயில்கள் மோதிய விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் விபத்து ஏற்படுத்திய ஒரு ரயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்து கொண்டிருந்தனர். இதனால் கவனச் சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, உறுதி செய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்” என்றார்.

Ashwini Vaishnaw

ரயில்வே பாதுகாப்பு ஆணையர்கள் (CRS) நடத்திய விசாரணை அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில், விபத்து நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, ஆரம்ப கட்ட விசாரணையில், ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநரே மோதியதற்குக் காரணம் என்று தெரிகிறது. விதிமுறைகளை மீறி இரண்டு சிக்னல்களை ரயில் கடந்து சென்று விபத்துக்குள்ளானதும், இந்த விபத்தில் இரு ஓட்டுநர்களும் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

From around the web