செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி.. வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது விபரீதம்..!

கேரளாவில் மோசமான பேட்டரி காரணமாக செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார். முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான இவருக்கு ஆதித்யஸ்ரீ (8) என்ற மகள் இருந்தார். இவர், திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், ஆதித்யஸ்ரீ நேற்று இரவு 10.30 மணி அளவில் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மோசமான பேட்டரி காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாசயனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை பெற்றோர் கூடுமானவரை குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.