அமித் ஷாவை நம்ப முடியாது...ஒன்றிணைந்து போராடுவோம்! சித்தராமைய்யா அதிரடி!!

நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது, அமித் ஷா விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமய்யா கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஆலோசனை நடைபெறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக கர்நாடகாவுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது. இங்கே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ள பாஜக மற்று ஜனதா தள உறுப்பினர்கள் உட்கட்சி பூசலில் நேரத்தை செலவழத்துக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் ஒன்றிணைந்து கன்னட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும். இந்த அநீதிக்கு எதிராக தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்று எக்ஸ் தளத்தில் கன்னட மொழியில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்ர்.
இந்த விவகாரத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள விளக்கம் நம்பத்தகுந்ததல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் ஓரணியில் திரண்டுள்ளனர். கேரளா, தெலங்கானா முதலமைச்சர்களும் விரைவில் இந்த எதிர்ப்பில் ஒன்றிணைவார்கள் எனத் தெரிகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஒன்றிய அரசு கூட்டணியில் இருப்பதால் என்ன நிலை எடுப்பார் என்று தெரியவில்லை.