வெளிச்சந்தையில் கூடுதலாக கோதுமை மற்றும் அரிசி விற்பனை..  ஒன்றிய அரசு முடிவு

 
Rice Wheat

உள்நாட்டில் விலை அதிகரிப்பை குறைக்கும் வகையில் மேலும் 50 லட்சம் டன் கோதுமை மற்றும் 25 லட்சம் டன் அரிசியை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்து உள்ளது.

நாடு முழுவதும் சமீப காலமாக அரிசி மற்றும் கோதுமையின் விலை அதிகரித்து வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக 15 லட்சம் டன் கோதுமை மற்றும் 5 லட்சம் டன் அரிசியை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது.

இதில் சுமார் 7 லட்சம் டன் கோதுமை இதுவரை ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் விலை குறைப்பு நடவடிக்கையாக கூடுதலாக அரிசி மற்றும் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 50 லட்சம் டன் கோதுமை மற்றும் 25 லட்சம் டன் அரிசியை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார்.

Rice

இது தொடர்பாக டெல்லியில் ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 2 மாதங்களாக அரிசி மற்றும் கோதுமை விலை அதிகரிப்பு குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. இதைக் கருத்தில்கொண்டு பொதுச் சந்தை விற்பனைத் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் கையிருப்பில் இருந்து 50 லட்சம் டன் கோதுமை, 25 லட்சம் டன் அரிசியை பொதுச் சந்தையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இது பொதுச் சந்தை திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 15 லட்சம் டன் கோதுமை, 5 லட்சம் டன் அரிசி விற்பனையைவிட மிக அதிகம். பொதுச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், அரிசியின் குறைந்தபட்ச விற்பனை விலை கிலோ ரூ.31-ல் இருந்து ரூ.29 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கோதுமையின் குறைந்தபட்ச விற்பனை விலையில் மாற்றமில்லை.

Wheat

கூடுதலாக அரிசி மற்றும் கோதுமையை விற்பனை செய்யும் நடவடிக்கை, சந்தையில் அரிசி மற்றும் கோதுமை கிடைப்பதை அதிகரிப்பது மட்டுமின்றி, அவற்றின் விலை குறையவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். உணவுப் பணவீக்கத்தை தொடர்ந்து கண்காணிப்பதே இந்த நடவடிக்கையின் மிக முக்கிய நோக்கம். எதிா்காலத்தில் தேவையைப் பொருத்து கோதுமை இறக்குமதி வரியைக் குறைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

பொதுச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் இணையவழி ஏலம் மூலம், மாவு ஆலை உரிமையாளர்கள், சிறு வணிகா்கள் என மொத்தமாக வாங்குவோருக்கு ஒன்றிய அரசின் கையிருப்பில் இருந்து கோதுமை மற்றும் அரிசியை அரசின் இந்திய உணவுக் கழகம் விற்பனை செய்து வருகிறது.

From around the web