7-ம் வகுப்பு பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்

 
Tamannaah

கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த வாசகம் இடம் பிடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 'சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா பிறந்த தேதி, அவர் நடித்த திரைப்படங்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் நடிகை தமன்னா தெலுங்கு மற்றும் தமிழில் நடித்த திரைப்படங்கள் மற்றும் அவரது நடிப்பு பற்றி பாடத்திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. தமன்னாவின் இடம்பெயர்வு, சமூகம் மற்றும் மோதல் என்ற தலைப்பில் இப்பாடம் இடம் பெற்றுள்ளது.

Karnataka

இதில் பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங்கும் இடம்பெற்றுள்ளார். தமன்னாவை பாடத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களின் பெற்றோர், அவரைப் பற்றி எங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினர். அத்துடன் பள்ளி நிர்வாகத்தையும் அவர்கள் கண்டித்துள்ளனர். 

ஒரு நடிகையிடம் இருந்து குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் பலர் கேள்வி எழுப்பினர். தமன்னா தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karnataka

இது தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்திடம் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அதில், “குழந்தைகள் மற்றொரு கலாச்சாரத்தைப் பற்றி அறிமுகப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை .ஆனால் எங்கள் ஆட்சேபனை என்னவென்றால், ஒரு நடிகையைப் பற்றிய அத்தியாயம் 7-ம் வகுப்புக்கு பொருந்தாது” என்று கூறியுள்ளனர்.

From around the web